தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 12 செப்டம்பர், 2016

ஹஜ் எனும் புனித யாத்திரை

ஹஜ் (Hajj) என்பது முஸ்லிம்கள் ஆண்டு தோறும் சவுதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணமாகும்.
இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
உடல் நலமும் பணவசதியும் உள்ள இசுலாமியர் ஒவ்வொருவரும் தன் ஆயுளில் ஒரு முறையேனும் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள வேண்டும்.
ஹஜ் புனிதப் பயணம் ஒரு மனிதன் தன்னை இறைவனிடம் (அல்லாஹ்) அர்ப்பணிப்பதாகக் கருதப்படுகிறது.
இந்தப் புனிதப் பயணத்தை மேற்கொள்ளும் ஒவ்வொரு இஸ்லாமியரும் இஹ்றாம் என்னும் புனித நிலையில் இருக்க வேண்டும்.
துல்ஹஜ் மாதத்தின் 8-ஆம் நாள் முதல் 12 ஆம் நாள் வரை சவுதி அரேபியாவிலுள்ள மினா, அறஃபாத், முஸ்தலிஃபா ஆகிய இடங்களில் தங்குவது, அந்நாட்களில் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவது, மக்கா நகரிலுள்ள திருக் கஃபாவைத் தவாஃப் செய்வது ஆகியவை ஹஜ்ஜின் முக்கிய அம்சங்களாகும்.
தவாஃப்
கஃபா ஆலயத்தை ஏழு தடவை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும். இந்த ஆரம்ப தவாஃப் செய்யும்போது மட்டும் முதல் மூன்று சுற்றுகள் ஓடியும் நான்கு சுற்றுகள் நடந்தும் நபி (ஸல்) அவர்கள் தவாஃப் செய்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், திர்மிதீ
இவ்வாறு தவாஃப் செய்யும் போது (ஆண்கள்) தங்கள் மேலாடையை வலது புஜம் (மட்டும்) திறந்திருக்கும் வகையில் போட்டுக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாக யஃலா முர்ரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ, அபுதாவுத்)
தவாஃப் செய்து முடித்தவுடன் ஹாஜிகள் மகாமு இப்ராஹீம் எனப்படும் இப்ராஹீமின் இடத்தில் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும்.
புனித நீர் பருகுதல்
தவாஃப் செய்து முடித்த உடன் அன்றே ஹாஜிகள் 'சஃயு' எனப்படும் தொங்கோட்டம் ஓட வேண்டும்.
அதாவது இப்ராகீமின் மனைவி ஹாஜர் தன குழந்தைக்காக தண்ணீர் தேடி ஓடியதை போன்றே ஹாஜிகளும் ஸபா, மர்வா எனும் குன்றுகளுக்கிடையே ஓட வேண்டும்.
அவர்கள் ஏழு முறை ஓடிய பின்னரே சம்சம் புனித நீர் கிடைத்தது என்பதால் ஹாஜிகளும் ஏழுமுறை ஓடிய பின் அந்த நீரைப் பருகலாம்.
அரபா மலை
அடுத்தநாள், அதாவது துல்-ஹிஜ்ஜாஹ் மாதத்தின் எட்டாம் நாள் (ஹஜ்ஜின் இரண்டாம் நாள்), ஹாஜிகள் மினா எனும் இடத்துக்குச் செல்வார்கள். அங்கு அவர்கள் இரவு பிரார்த்தனையில் (துஆவில்) ஈடுபடுவார்கள்.
மறுநாள், அதாவது துல்-ஹிஜ்ஜாஹ் மாதத்தின் ஒன்பதாம் நாள் (ஹஜ்ஜின் மூன்றாம் நாள்), அனைவரும் அறஃபா மலைக்கு செல்வார்கள்.
அங்கு மலையில் முகமது நபி நடத்திய கடைசிச் சொற்பொழிவினை ஞாபகப்படுத்தி, அனைவரும் அங்கு குர்ஆனைப் படித்து, இறைவனின் பெயரை உச்சரித்து தொழுகையில் ஈடுபடுவர்.
அறஃபா மலைக்கு மன்னிப்பு வழங்கும் மலை என்ற பெயரும் இருப்பதால் இந்த கடமையே ஹஜ் பயணத்தின் சிறப்பாக கருதப்படுகிறது.
முஸ்தலிபா- கற்கள் சேகரித்தல்
சூரியன் மறைந்த பின்னர் அறஃபா மலையை விட்டு, அதற்கும் மினாவுக்கும் இடையே அமைந்த முஸ்தலிபா என்ற இடத்திற்கு செல்வார்கள்.
அங்கு அனைவரும் கூடாரம் இல்லாத திறந்தவெளியில் இரவைக் கழிப்பார்கள். இங்கு மஃக்ரிப், இஷாத் முதலிய தொழுகைகளையும் திக்ரு முதலான தியானங்களைச் செய்வார்கள்.
இங்கு இஷாத் எனப்படும் தொழுகைக்குப் பின், அடுத்த நாள் காலையில் அவர்கள் அடுத்த கடமையான சைத்தான் மீது கல்லெறியும் நிகழ்வுக்காக கூழாங்கற்களை இங்கு சேகரித்து எடுத்துக்கொள்வர்.
சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்வு
மினாவில் ஹாஜிக்கள் ஜம்ரதுல் எனும் சாத்தான் மீது கல்லெறியும் கடமையை செய்வர். இவர்கள் சைத்தானின் மீது கொண்டுள்ள வெறுப்பை காட்ட இவ்வாறு செய்யப்படுகிறது.
அறுத்துப் பலியிடுதல்- குர்பானி கொடுத்தல்
சைத்தானின் மீது கல்லெறிந்த பின்னர், ஹாஜிகள் விலங்குகளைப் பலியிடுவர். அதாவது இப்ராகீமின் மகனுக்குப் பதிலாக ஒரு செம்மறி ஆட்டை பலியிடச் செய்ததன் நினைவாக இது செய்யப்படுகிறது.
இந்த சடங்கு முடிந்த பின் ஆண்கள் தலைமுடியை சவரம் செய்தல் அல்லது சற்று வெட்டி "கஸ்ரை" முடிப்பர். பெண்கள் தங்கள் சடையில் இருந்து ஒரு அங்குல முடியை வெட்டிக் கொள்வர்.
தவாப் அஸ்-சியாராஹ்
இன்று ஹாஜிக்கள் அனைவரும் மக்காவில் உள்ள அல்-ஹராம் பள்ளிவாயலுக்கு, மற்றொரு தவாஃப் செய்வதற்கும், கஃபாவைச் சுற்றி வருவதற்கும் செல்கின்றனர். இது 'தவாப் அஸ்-சியாராஹ்' அல்லது 'தவாப் அல் இபாதா' என்று அழைக்கப்படுகிறது.
இது இறைவன் மேல் அவர்கள் கொண்டுள்ள அன்பு மற்றும் பற்றுறுதியைக் குறிப்பதாகும். பின்னர் அன்றிரவை மீண்டும் மினாவில் கழிப்பார்கள்.
பதினோராம் நாளின் மதியம் மற்றும் அதற்கு அடுத்த நாளும் மீண்டும் சைத்தானின் மீது கல்லெறியும் கடமையை செய்வார்கள்.
பனிரண்டாம் நாள் சூரியன் மறையும் முன் மக்கா நகருக்கு அவர்கள் செல்வார்கள். அன்று அவர்கள் மாலை நேரத்திற்கு முன் செல்லவில்லை என்றால் அவர்கள் அடுத்த நாள் மீண்டும் கல்லெறியும் சடங்கை செய்தபின் தான் செல்ல முடியும்.
தவாபுல் விதாஃ
இறுதியாக ஹாஜிகள் அனைவரும் மக்காவிற்கு பயணிக்கும் முன்னர் கடைசியாக ஒரு தவாஃப் செய்யவேண்டும். இதன் பெயரே தவாபுல் விதாஃ என்பதாகும்.'விதாஃ' என்றல் விடை கொடுத்தல் என்று பொருள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக