தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

பிரார்த்தனைகளை விட வலிமையானது பொறுமை! - புத்தரின் உபதேசம்

ஒருநாள் புத்தர் தனது சீடர்களுடன் அருகே உள்ள ஊருக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அந்த ஊருக்குச் செல்ல ஓர் ஆற்றைக் கடக்க வேண்டும். வெகு தூரம் நடந்து வந்ததால், ஆற்றங்கரையை அடைந்தபோது, அனைவரும் களைபுற்றிருந்தனர். அதனால், சிறிது நேரம் இளைப்பாறி விட்டு செல்ல முடிவு செய்த புத்தரும் சீடர்களும் ஆற்றங்கரை அருகே, ஒரு மரத்தடி நிழலில் அமர்ந்தனர்.
புத்தர்
அப்போது, புத்தர் தனக்கு மிகவும் தாகமாக இருப்பதாகவும், ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்துவரும்படியும் ஒரு சீடரை அனுப்பி வைத்தார். உடனே ஆற்றைநோக்கி விரைந்தார் சீடர், அப்போதுதான் அவருக்கு முன்பாக ஒரு மாட்டு வண்டி ஆற்றைக் கடந்துகொண்டிருந்தது. அதனால் ஆற்று நீர் கலங்கியிருந்தது. இந்த விஷயம் சீடருக்குத் தெரியாது. தண்ணீர் கலங்கி இருந்தது கண்டு, இந்த அழுக்கு நீரை எப்படி குருவுக்கு குடிக்க கொடுப்பது என்று யோசித்த சீடர், மீண்டும் புத்தரிடம் வந்து "அந்த ஆற்று நீர் குடிப்பதற்கு உகந்தாக இல்லை குருவே!..." என்றார்.
"இல்லை, இல்லை... அது அப்படி இருக்காது, நீ கொஞ்சம் ஓய்வெடுத்து விட்டு, மீண்டும் ஒரு முறை சென்று பார்த்துவிட்டு வா..." என்றார் புத்தர்.
புத்தரின் உபதேசம்
"நாம்தான் சரியாக கவனிக்கவில்லையோ! குருவே சொல்லி விட்டார்; அவர் சொன்னால் சரியாகத்தானே இருக்கும். வீணாக நேரத்தைக் கழிப்பதை விட, அவர் சொல்வது போல மீண்டும் பார்த்து விடலாம்" என்று முடிவு செய்து கொண்டு, உடனே ஆற்றைநோக்கி விரைந்தார்.
ஆனால் ஆறு அப்போதும் கலங்கிய நிலையில்தான் இருந்தது. எனவே இம்முறை போன வேகத்திலேயே திரும்பி வந்த சீடர், "ஆற்று நீர் குடிப்பதற்கு ஏற்றதாகத் தெரியவில்லை குருவே" என்றார்.
"ஓ.. அப்படியா... உன்னை ஓய்வெடுத்து விட்டு சிறிது நேரம் கழித்துதானே கிளம்பச் சொன்னேன். நீ ஏன் உடனே கிளம்பினாய்?'' என்றார்.
''இல்லை!... குருவே, தாங்கள் அதிக தாகத்தோடு இருந்தீர்கள்!, அதேபோல் உறுதியாகச் சொன்னதால் எதற்காக தாமதிக்க வேண்டும் என்று உடனே சென்றேன். ஆனால் நான் பார்த்தவரையில் அது முற்றிலும் குடிப்பதற்கான தண்ணீர் அல்ல'' என்றார் சீடர்.
"இல்லை, நீ சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்து, ஓய்வெடுத்து விட்டு, இன்னும் ஒருமுறை சென்று பார்த்து வா" என்றார்.
"குருவிற்கு நம் மீது நம்பிக்கையில்லை போலும்; சரி அவருக்காக ஒரு தடவை போய்த்தான் பார்த்து விட்டு வருவமே " என்று அந்த சீடர் நினைத்து கொண்டார்.
சிறிது நேரம் கடந்த பின்பு, கிளம்பிச் சென்ற சீடர் இந்த முறை ஆற்று நீர் தெளிவாக இருந்தைக் கண்டார். மிகவும் மகிழ்ச்சியடைந்த சீடர் தண்ணீரை எடுத்துக்கொண்டு புத்தரிடம் திரும்பினார்.
கொண்டு வந்த தண்ணீரை புத்தரிடம் கொடுத்தார். அவரும் குடித்து முடித்தார். பின், மெதுவாக அந்த சீடர் "குருவே, ஒரு சிறிய சந்தேகம் கேட்கலாமா..." என்று பணிந்து கேட்டார்.
"நிச்சயமாக, கேள்" என்றார் புத்தர்பெருமான்.
புத்தர்
"அழுக்கான ஆற்று நீர், எப்படி மிகவும் நன்றாகவும் தெளிவாக மாறியது; இது மந்திரத்தை நானும் கற்றுக்கொள்ளலாமா குருவே!" என்று பணிவுடன் கேட்டார்.
சிறிய புன்னகையுடன் புத்தர் "அப்படி ஒன்றும் மாயாஜலம் எதுவும் நிகழ்த்தப்படவில்லை'' என்று கூறியவர் தொடர்ந்து சீடருக்கு அது பற்றி விளக்கத் துவங்கினார்.
''நீ தண்ணீர் கொண்டு வருவதற்காக ஆற்றுக்குச் செல்வதற்கு முன்பு ஒரு மாட்டு வண்டி ஆற்றைக் கடந்து சென்றிருந்தது. அதனால்தான் ஆற்றுநீர் கலங்கிவிட்டது. மேலும் நான் தண்ணீர் கேட்டபோது, எனக்கு விரைவில் தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்பதற்காக, நீ பதற்றத்துடன் சென்றதால், உன்னால் ஆற்றுநீர் கலங்கி இருப்பதற்கான காரணத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. கலங்கிய நீரை போன்றுதான் மனமும், அதாவது, குழம்பிய நீர் எப்படி குடிக்க ஏற்றதாக இருக்காதோ, அதுபோல குழப்பமான மனநிலை முடிவெடுக்க ஏற்றதல்ல. எனவே ஒரு முடிவை அவசர கதியில் எடுப்பதோ, கோபத்தில் எடுப்பதோ தவறாகவே முடியும்'' என்று போதித்தார்.
மேலும், ''இது போலத்தான் உங்கள் மனமும். உங்கள் மனமானது குழப்பத்திலிருக்கும்போது அதை அதன் போக்கிலேயே விடுங்கள், சிறிது நேரம் சென்றதும் அது தானே தெளிவடையும். சிறிது நேரம் பொறுமையாக இருங்கள், மனதை அமைதிப்படுத்த எந்த ஒரு விஷயத்தையும் கஷ்டப்பட்டு செய்ய வேண்டியதில்லை. அது தானாக அமைதியடையும். பின்னர் எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். பொறுமையே மனதினைப் பக்குவப்படுத்தும்'' என்றார்.
இதையே 'பிரார்த்தனைகளை விட மிக உயர்ந்தது பொறுமைதான்' என்ற புத்தரின் புகழ்பெற்ற பொன்மொழியும் உணர்த்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக