தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, November 14, 2017

உலகையே கடலால் இணைத்த தமிழன்! மறைக்கப்பட்ட மறுபக்கம்: வெளிவந்த ஆதாரங்கள்!?


இந்த உலகத்தில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு இனங்களுக்கும் தனக்கென தனித்துவமான பூர்வீக வரலாறு ஒன்றை கொண்டிருக்கும்.

நிச்சயமாக அந்த வரலாற்றில் அவர்களின் பாரம்பரிய கலை, கலாச்சாரங்களின் தோற்றம், தொழிநுட்பம், அவர்களது நாகரீகம் என்பன தடம் பதித்திருக்கும்.

அவ்வாறு உலகில் தொன்மையான நாகரீகத்தைக் கொண்ட பூர்வ குடிகள் பலர் இருக்கின்றனர். அவற்றுள் தமிழர்களும் தடம் பதித்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

தமிழர்களைப் போலவே எகிப்தியர்களும் தனக்கென ஒரு தொன்மையான நாகரீக வரலாற்றைக் கொண்டிருக்கின்றார்கள். எகிப்தியர்களின் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றில் தமிழர்களின் தொன்ம அடையாளங்கள் ஏராளம் உள்ளதாக கடல் சார் பண்பாட்டு ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கலாச்சாரத்திலும் சரி, அறிவியலிலும் சரி சாதாரண நிலையில் இருந்து திடீரென வளர்ச்சி கண்டவர்களே எதிப்திய நாகரீகத்தை உடையவர்கள் எனலாம்.

திடீரென உயர்வினை அடைந்த மேம்பட்ட சமூகமாக மாறியவர்களே இந்த எகிப்தியர்கள்.

இவ்வாறு இவர்கள் திடீரென தனது சமூகக் கட்டமைப்பிலிருந்து உயர்வடைந்தமைக்கு தமிழர்களே காரணம் என ஆய்வாளர்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

எகிப்தியரின் வாழ்வியலின் மத்தியில் வேற்று சமூகம் ஒன்று குடியேறியதனாலேயே இப்படி ஒரு திடீர் மாற்றம் கிட்டியது என்றும், அந்த மாற்றம் தென்பகுதியில் உள்ள குமரிக்கண்டத்தில் இருந்து வந்த தமிழர்களாலே ஏற்பட்டது என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதையே மேலும் வலுப்படுத்துகின்றார் அலெக்ஸாண்டர் கெந்தர் தேவ் எனும் தொல்பொருள் ஆய்வாளர்.

அவருடைய கூற்றின்படி, எகிப்தியர்கள் வாழ்ந்து வந்த காலத்தில் தென்பகுதியில் இருந்து வேறு ஒரு சமூகம் அங்கு வந்து குடியேறியுள்ளது. அந்த சமூகம் குமரிக்கண்டமாக, தமிழர் வரலாறு குறிப்பிடும் பிரதேசம் என்றும் கெந்தர் தேவ் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, ஆரம்ப கால தமிழர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வணிக நடவடிக்கைகள் உலகம் முழுவதும் கடல் கடந்து பரவியிருந்தது.

இதில் உலகின் மேற்கு பகுதியை இணைக்க மையப்பகுதியில் இருக்கும் எகிப்து நாட்டின் வணிகம் மிக முக்கியமானது, ஏனெனில் உலகின் மையப்பகுதியில் இருக்கும் நாட்டுடன் கடல் வணிகம் செய்யும் திறன் பெற்றவர்களே உலகம் முழுவதும் வணிகம் செய்யும் திறன் பெற்றவர்களாக இருக்க முடியும் எனவும் கெந்தர் தேவ் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைவாக, தமிழர்கள் உலகம் முழுவதும் கடல் வணிகம் செய்யும் திறன் கொண்டவர்களாக காணப்பட்டார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை.

எமது பண்டைய தமிழ் வரலாற்றில் குறிப்பிடப்பட்ட, வெண்ணிப்பறந்தலைப் எனும் போரில் வெற்றி பெற்ற மன்னன் முதலாம் கரிகாலனை ஒரு பெண் பாற் புலவர் இவ்வாறு பாடுகின்றார்,

“இந்த முதல் கரிகாலனுக்கு மிகமிக முன்னோனாகிய தமிழ் மன்னன் ஒருவன்,
காற்றைப் பயன்படுத்தி கப்பல் செலுத்தும் தொழிநுட்பத்தைக் கற்று,
நடுக்கடல் ஊடே கப்பலோடிச் சென்றவனாதலால், புகழ் பெற்றான்..,
அது போன்ற பரம்பரையில் வந்தவனே..”

என்று அந்த பெண்பாற் புலவர் பாடியுள்ளார். இவ்வாறு வரலாற்றின் ஆரம்பத்திலேயே தமிழர்களின் கடல் கடந்த வணிகம் பரவி புகழ் பெற்றுள்ளமைக்கு இந்த கவியும் ஒரு சான்றாகும்.

உலக கடல் பயணத்தில் ஈடுபடுபவர்கள் ஒரு குறிப்பிட்ட திசையை துல்லியமாக அறியும் வகையில் திசை அறியும் திறன், இடி, மின்னல் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ளும் திறன், சுனாமி, கடல் சீற்றம் போன்ற இயற்கை சீற்றத்தில் இருந்து தப்பிக்கும் திறன் என்பவற்றில் கைத்தேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

அந்த வகையில், தமிழர்கள் அனைத்து திறன்களையும் பெற்று கடல் வணிகத்தில் சிறந்த ஆளுமையாக திகழ்ந்தார்கள் என வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

உலகின் நடுக் கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் முக்கிய வணிகர்களாக தமிழர்கள் இருந்துள்ளதாக எம்முன்னோர் சான்றுகள் எடுத்துரைக்கின்றன.

இதேவேளை, எகிப்தியர்கள் கடல் வணிகத்திற்கு முயற்சி மேற்கொண்ட போதும் உலகம் முழுவதும் அவர்களால் கடல் வணிகம் மேற்கொள்ள முடியவில்லை.

ஏனெனில், நடுக்கடல் வழியாக கடல் நீரோட்டத்தையும், காற்றையும், கடல் ஆமைகளின் வழிகளையும் துணை கொண்டு கடல் கடந்து பயணிக்கக்கூடிய வீரர்களாக தமிழர்கள் மட்டுமே பெயர் பெற்றிருந்தார்கள்.

உலக புகழ் பெற்ற வரலாற்று ஆய்வாளரான ஸ்காப் என்பவர் எரித்ரேயக்கடலில் பெரிப்ளஸ் என்ற கிரேக்க நூலுக்கான ஆங்கில மொழிப்பெயர்ப்பு பதிப்பின் முன்னுரையில்,
“ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தும், பழம்பெரும் இந்தியாவும், தமது வணிகப் பொருட்களை வாங்க, விற்க பாரசீக வளைகுடாவின் ஊடாக ஒரு வணிக முறையை தமிழர்கள் உருவாக்கிக்கொண்டனர்.

அத்தோடு, அவர்கள் அன்றே ஆப்பிரிக்காவோடும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். தமிழகத்தில் உருவாகியிருந்த நாகரீகத்தின் காரணமாக தம் சொந்த கப்பல் மூலம் போக்குவரத்தை மேற்கொண்டு கடல் வணிகத்தை சாத்தியமாக்கியிருந்தனர்” என குறிப்பிட்டுள்ளமை தமிழரின் கடல் கடந்த வணிகத்திறனை புலப்படுத்துகின்றது.

இதேவேளை, பருவக்காற்றை கடல் பயணத்திற்கு பயன்படுத்தும் முறையை கிப்பாலஸ் என்பவர் கண்டுபிடிப்பதற்கு பலநூறு நூற்றாண்டுகளுக்கு முன்பே, தமிழர்களும், அரேபியர்களும் பருவக்காற்றை பயன்படுத்தி கடல் பயணம் செய்து கொண்டிருந்தனர் எனவும் ஸ்காப் குறிப்பிட்டுள்ளார்.
கென்னடி என்கிற மற்றொரு வரலாற்று ஆய்வாளர் தனது கட்டுரை ஒன்றில், கி.மு. 7ஆம் நூற்றாண்டில் இருந்துதான், இந்திய, பாபிலோனிய வர்த்தகம் மிகப்பெரிய அளவில் தமிழர்களாலும், சிறிய அளவில் ஏனையவர்களாலும் நன்கு செழித்து வளர்ந்தது என்றும், இந்திய வணிகர்கள் அரேபிய, கிழக்கு ஆப்பிரிக்கா, பாபிலோனியா, சீனா போன்ற இடங்களில் தங்கி வணிகம் புரிந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு வரலாற்று ஆய்வாளர்களாலும், அறிஞர்களாலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்களில் இருந்து தமிழர்களின் கடல் கடந்த வணிகத்தின் வளர்ச்சி நிலையை அறிய முடிகின்றது.

கடல் கடந்த வணிகத்தில், எகிப்தியர்கள் ஆரம்பகட்டத்தில் துடுப்பு மூலம் கடல் பயணம் செய்ய முயற்சி செய்தனர். ஆனால், கடலின் சீற்றம், திசை அறிதல், காலநிலை மாறுபாடுகளால் அவர்களால் அதில் வெற்றிபெற முடியவில்லை.

ஆனால், தமிழர்கள் பருத்தித் துணி கொண்டு உருவாக்கப்பட்ட பாய் மரக் கப்பல் மூலம் செங்கடல் வழியாக எகிப்தில் கடல் வணிகம் செய்தனர்.
அதனுடன், பாய்மரக் கப்பல் மூலம் கடலின் நீரோட்டத்திற்கு ஏற்ப, கால நிலைகளை அறிந்தும் கடல் பயணம் மேற்கொண்டனர்.

இதன் பின்னரே, தமிழர்களை போலவும் அவர்களது மரபு போலவும் எகிப்தியர்கள் பருத்தித் துணியினைக்கொண்டு பாய்மரக் கப்பல் செய்யவும், பருத்தியைக் கொண்டு உடைகள் அணியவும் ஆரம்பித்தனர்.
இதுபோல, எகிப்தில் தமிழர்களின் வணிகம் தாக்கம் செலுத்தி இருந்தமைக்கு ஏராளமான தொன்ம அடையாளங்கள் இன்றளவிலும் தடம் பதித்து காணப்படுகின்றன.

எகிப்து என்றால் அனைவரின் மனக்கண் முன்பும் தோன்றுவது மூன்று முக்கிய அம்சங்கள். அவை யாதெனில் எகிப்தின் பிரமீட்டுக்கள், நைல் நதி மற்றும் இறந்த உடலை பதப்படுத்தும் மம்மி என்பனவாகும்.

ஆனால் அவைகள் ஒவ்வொன்றிலும் தமிழர்களின் தாக்கம் இருந்தமைக்குரிய அடையாளங்கள் இன்றும் காணப்படுகின்றன.
அதன்படி இந்த எகிப்திய பிரமீட்டுக்களில் தமிழி எனப்படும் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் மொழியின் அடையாளங்கள் இருப்பதாக நம்பப்படுகின்றன.

தமிழர்கள் வாழும் முக்கிய பிரதேசமாகிய தமிழகத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இறந்த உடலை மூலிகை தைலம் கொண்டு பதப்படுத்தப்படும் முறை காணப்பட்டது, இந்த முறையே பிற்காலத்தில் எகிப்திலும் பின்பற்றப்பட்டு வந்துள்ளதாக கருதப்படுகின்றது.
இரண்டு இடங்களில் ஒரே மாதிரியான உடல் பதப்படுத்தப்படும் முறை, இரு தேசங்களுக்கும் இடையிலான ஒரு தொடர்பு இருந்ததை வெளிக்காட்டுகின்றது.

எகிப்து ஆராய்ச்சியாளர்களினுள் பிலிண்டஸ் பெட்ரி என்ற ஆய்வாளர் எகிப்தியர்களின் பூர்வீகம் பற்றி ஆய்வு செய்யும் போது சேகரித்த மண்டை ஓடுகள் மூலமாக, எகிப்தில் முதல் முதலாக வந்த தொன்மை மக்கள் இந்திய பகுதியைச் சேர்ந்தவர்கள் என முன்வைத்தார்.

எகிப்தின் 18ஆம் தலைமுறையின் பருவ மன்னர்களும், தமிழர்களும் செங்கடலை பயன்படுத்தி செம்பு, யானை, மயில் தோகை, வைரம், வைடூரியம், மானிக்கம், உப்பு, மரம் போன்றவற்றை வணிகம் செய்துள்ளனர்.

இந்த தொடர்புகளின் விளைவாக, செங்கடலில் உள்ள 16 துறைமுகங்களில், 2 துறைமுகங்களில் கோரா, பூமான் என்ற தமிழ் மன்னர்களின் பெயர்கள் அங்கிருக்கும் பானை ஒடுகளில் குறிப்புகளாக உள்ளதாக நம்பப்படுகின்றது.
எகிப்தின் பாசிர் அல் கோதிம் என்ற இடத்தில் செய்யப்பட்ட ஆய்வுகளில் தமிழி என்கின்ற தொண்மையான தமிழ் எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

எகிப்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான பிரமீட்டுக்களில் காசா பிரமீட்டு மிக பெரியதாக உள்ளது. இதிலும்கூட தமிழி எழுத்துக்கள், காசா பிரமீட்டு நுழைவு வாயிலில் கந்தன் என்ற பெயராக எழுதப்பட்டுள்ளது என்பதை தமிழகத்தை சேர்ந்த தமிழ் மொழி ஆய்வாளர் ஒருவரும் உறுதி செய்துள்ளார்.

அத்துடன், தமிழர்களின் மரபு சார்ந்த வேட்டையாடும் வளரி என்கின்ற கருவி, எகிப்து பழங்குடியினரின் பழக்கத்திலும் இருந்துள்ளமைக்கு சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

உலகில் மதம் உருவாவதற்கு முன்னர் உலகின் மூத்த குடியான தமிழர்களின் இயற்கை வழிபாட்டு முறைகள் பின்பற்றப்பட்டு வந்தன.

அந்தவகையில் எகிப்தில் ஏனைய மத வழிபாடுகள் அதிகமாக இருந்தாலும்கூட தமிழர்களின் இந்த இயற்கை வழிபாடு தற்போதும் பெரும் பங்குக் கொண்டிருக்கின்றது.


இவ்வாறு எகிப்தியர்களின், வணிகம், வரலாறு, கலாச்சாரம் போன்றவற்றில் தமிழர்களின் தாக்கம் செல்வாக்குச் செலுத்துவதற்கு, எமது பண்டைத் தமிழர்களின் தொன்மையும், கடல்சார் வணிகத்தித்திறன் உத்திகளுமே பெரிதும் பங்காற்றியுள்ளன.

உலகையே கடலால் இணைத்த பண்டைத் தமிழர்களின் வரலாற்றை ஆய்வு செய்து மறுபடியும் தமிழர்களின் கடல் சார் வணிகத்தையும், உலக நாடுகளில் தமிழர்களின் தொன்மையின் சிறப்பையும் அறியச் செய்வது, தற்போதுள்ள தமிழர்களாகிய எம்மிடையே விடப்பட்டுள்ள பாரிய சவாலாகும்.



No comments:

Post a Comment