தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, November 13, 2017

நெதர்லாந்து தேசத்தில் ஒரு விண்ணுயர் பெரியகோயில்!!


பெர்லின் மாநகரத்தை சுற்றிக்கொண்டிருந்த நான் அந்த ஓட்டத்தை அப்படியே நிறுத்திவிட்டு, இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கும் நாளில் சென்ற ஓர் முக்கிய இடத்தை இன்றே எழுதிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் சற்றே ஒரு முறை திசைமாறி பயணிக்கிறேன்.
வீட்டுக்காய்ச்சல் (ஹோம்சிக் என்பதன் தமிழாக்கம் என்று வைத்துக்கொள்ளுங்கள் ;-)) என்பது வெளிநாட்டில் வாழ்வோரை நிழலாய் துரத்தும், பல நாட்கள் உள்ளே ஒளிந்திருக்கும் ஒரு சில நாட்களில் உறுத்தி உறக்கத்தையே பறிக்கும், தமிழகத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தோர் வெளிநாடு வந்தால் அவர்க்கு தன்னையும் அறியாமலேயே வரும் இன்னொரு நோயும் உண்டு “கோவில் காய்ச்சல்”.
கைத்தவறி விழுந்த புத்தகத்தை கூட எடுத்து கண்ணில் ஒத்திக்கொண்டு, மரத்தடி பிள்ளையாரே, மாதா கோவிலோ என்று பாராமல் கன்னத்தில் போட்டுக்கொள்ளும் மக்களுள் யாமும் ஒருவன் தான்.
பெற்ற தாயையும் உற்ற காதலியும் உடன் இருக்கும் போது அதன் அருமை நமக்குத் தெரிவதில்லை அதுபோன்றே பேசும் தமிழும் வணங்கும் கோயிலும் நம் அன்றாட வாழ்வில் பிண்ணிப்பிணைந்தவை, வங்கக்கடல் மோதி விளையாடும் சென்னை மாநகரில் மாட மயிலை திருவல்லிக்கேணி சில நேரம் செல்வதுண்டு, பைந்தமிழ் முன் செல்ல பார்த்தசாரதி பின் செல்லும் அழகையும், தீந்தமிழ் தேவாரத்தால் கயிலை விட்டு மயிலையில் மயங்கி நிற்கும் கபாலியின் திருமுகத்தையும் பார்ப்பதுண்டு, எண்ணற்றோர்க்கு கவலை தீரும் மருந்தாய் அந்த இடங்கள் இருந்ததுண்டு!
வங்கக்கடல் ஓரம் இருந்தோர் வடதுருவம் வடகடல் மோதி விளையாடும் ஒல்லாந்தர் தேசம் வந்தால், கூப்பிட்ட குரலுக்கு அம்மையும் இல்லை தேடி கைகூப்ப கோவிலும் இல்லை என்ற கவலை சிலநேரம் வருவதுண்டு.
தமிழர்கள் கடல் கடந்து வந்தாலும் பேசும் மொழியையும், பூசிக்கும் தெய்வத்தையும் உடன் அழைத்து செல்ல மறப்பதில்லை, தமிழையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக போற்றுபவர் கடல் சூழ்ந்த ஈழ நாட்டின் தமிழர்கள், வடக்கே யாழ் நகரின் நல்லைக்கந்தன் முதல் தெற்கே கதிர்காமம் வரை மேற்கே மாந்தை முதல் கிழக்கே கோணேஸ்வரம் வரை ஆலயங்களை இக்கட்டான சூழ்நிலையிலும் நெறிதவறாது போற்றினர்.
நெதர்லாந்தில் வாழும் இலங்கைத் தமிழ் மக்கள் இப்படி தாங்கள் போற்றி வணங்க ஒரு ஆலயம் எழுப்ப நினைத்து இந்த ஒல்லாந்தர் தேசத்தில் வடகடல் ஓரம் டென் ஹெல்டர்எனும் பகுதியில் விண்ணுயர் கோபுரமும் கொடிமரமும் கொண்டு ஓர் ஆலயம் பணித்தனர்.
குரோனிங்கென் திருநகர் வந்தது முதல் டென் ஹெல்டர் செல்லும் வழியை கூகிள் வரைபடங்களில் பலநாட்கள் பார்த்ததுண்டு, இரயிலேறி சென்றால் சுமார் மூன்றரை மணி நேரம், செல்லும் போது கோவிலின் திறப்பு நேரமும் ஒத்துவரவேண்டும். குரோனிங்கென் நகரில் தமிழ் பேசும் மக்களிடம் ஒரு வழியாய் பேசி திட்டம் தீட்டி ஒரு வெயில்கால சனிக்கிழமை முதல்முறை சென்றோம். குரோனிங்கென், சுவாளே ஆம்ஸ்டெர்டாம், டென் ஹெல்டர் என்று சுற்றிக்கொண்டு சென்றது இரயில், காலை பதினொன்றரை மணிக்கு டென் ஹெல்டரில் இறங்கி ஒரு ஐந்து நிமிட பேருந்து பயணத்தில் அந்த பகுதியை அடைந்தோம்.
மரங்கள் சூழ்ந்த சாலையினூடே சற்றே சென்றால் கண்முன்னே, நீலவானை கிழித்துக்கொண்டு நிற்கும் செம்பவள கோபுரம், ஒரு கணத்தில் யாரோ அப்படியே தூக்கி திருமயிலையில் விட்டார் போல் ஒரு உணர்வு!
யாழிகளும் தோரணவாயிலும் கடந்து உள்ளே சென்றால் வர்ணஜாலமான மேல் விதானம் கொடிமரம், கொடிமரத்தின் நேர் மேலே யானையும் காளையும் சேர்ந்த தாராசுரத்தில் காணப்படுவது போன்ற ரிஷபகுஞ்சர ஓவியம். அனைத்து சன்னதிகளிலும் திரை போடப்பட்டிருந்தது, உச்சி வேலை பூசை சமயம், சற்று நேரத்திற்கெல்லாம் தேவபாஷையும் தீந்தமிழும் ஒலிக்க திரைகள் நீக்கி கருவறையில் ஆனைமுகர்க்கு ஆராதனை.
கொடிமரத்தின் நேர் மேலே யானையும் காளையும் சேர்ந்த தாராசுரத்தில் காணப்படுவது போன்ற ரிஷபகுஞ்சர ஓவியம்
அருள்மிகு வரதராஜ செல்வவிநாயகர் என்பது ஆலய பிள்ளையாரின் திருப்பெயர், இரு புறமும் அப்பனும் அம்மையும், சற்றே உள் வலம் வந்தால் தனி சன்னதியில் திருமகள், கோஷ்டத்தில் கணபதி, தென்முகக்கடவுள், லிங்கோத்பவர், பிரமன், கொற்றவை மற்றும் சண்டிகேசர்.  தனி சன்னதியில் தமிழர் கொண்டாடும் முருகன், முன்னே வந்தால் குழலூதும் கண்ணன், ஆலிலைக்கண்ணன், பிள்ளையாரின் ஐம்பொன் திருமேனிகளும், சிறிய சன்னதியில் மாயக்கண்ணனும் தொடர்ந்து உற்சவர் திருமேனிகளும், ஒன்பது கோளும் ஆலயம்காப்போன் பைரவர் என ஆலயம் நிறைந்து நிற்கிறது.
ஐம்பொன் திருமேனிகள்
கொடிமரமும் கருவறையும் 
ஆலய குருக்கள் பூசனை முடித்துவிட்டு கனிவாய் பேசினார், கோவிலின் பூசை நேரம், திருவிழாக்கள் என்று அத்துனையும் எடுத்துச்சொன்னார், தேர் இழுத்தல் முதல் சூரசம்ஹாரம் வரை ஒரு குறையுமின்றி விழாக்கள் செய்யப்படுகின்றனவாம். கோவிலுக்கு எளிதில் எப்படி வரவேண்டும் என்ற போக்குவரத்து தகவல் முதல் இந்த தேசத்தில் சூரிய உதய அஸ்தமனத்திற்கு ஏற்றவாறு பஞ்சாங்கம் மாறுவது வரை அக்கறையுடன் சொல்லக்கேட்டோம்.
பல நாட்கள் ஓடிய பிறகு இன்று இந்த இலையுதிர்காலத்து அட்டமி நாளில் மீண்டும் டென் ஹெல்டர் கோவில் செல்லும் வாய்ப்பு, இலைகள் உதிர்த்த மரங்களினூடே கார்மேகத்தை கிழித்துக்கொண்டு அதே கம்பீரத்துடன் நிற்கிறது கோபுரம் ! முதல் முறை வந்தபோது கைகூப்பி தொழுத நான் இன்று தீந்தமிழ் தேவாரம் சொல்லட்டுமா என்று கேட்க இசைந்து அனுமதி தந்தார் குருக்கள், பல மைல்களுக்கு அப்பால் இன்று நாலு வாரத்தை தீந்தமிழ் சொன்னது மனதில் வெள்ளையடித்தது போல் ஒரு உணர்வு !
திருநீறும் திருவருளும் பெற்று இனி திருவாதிரை நாளுக்கு டென் ஹெல்டர் வர எண்ணி சுமார் நான்கு மணி நேர இரயில் பயணம் எமை குரோனிங்கென் சேர்த்தது !
 

No comments:

Post a Comment